

சங்கீதா மீது அவரது தாய் பானுமதி, வயதான என்னை வெளியேற்றி விட்டு நான் வசித்த வீட்டை அபகரிக்க முயற்சிக்கிறார் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
சங்கீதா நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. சங்கீதாவும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள்தான் பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தரை தளத்தில் பானுமதியும், முதல் மாடியில் சங்கீதாவும் குடியிருக்கிறார்கள். இந்த வீட்டை சகோதரருக்கு தாய் கொடுத்து விடுவாரோ என்று சங்கீதா சந்தேகித்ததாகவும், அதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு மகளிர் ஆணையத்துக்கு புகார் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கீதா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
இந்த உலகத்துக்கு என்னை கொண்டு வந்த தாய்க்கு நன்றி. 13 வயதிலேயே எனது படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பினார். வெற்று காசோலைகளில் கையெழுத்து போட வைத்தார். வேலைக்கு போகாமல் மதுபோதைக்கு அடிமையான மகன்கள் நலனுக்காக என்னை சுரண்டினார். ஒரு தாய் எப்படி இருக்கக்கூடாது என்பதையும் கற்றுக்கொடுத்தார்.
எனது கணவருக்கு தொல்லை கொடுத்து குடும்ப நிம்மதியை குலைத்தார். இப்போது என்மீது தவறான குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார். இதன் மூலம் என்னை வலிமையான பெண்ணாக மாற்றியதற்காக தாய்க்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு சங்கீதா கூறியுள்ளார்.