

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் 4ந் தேதி (நாளை) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் முன்னணி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பில் மட்டுமின்றி, நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது ‘இம்மோர்டல்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம், ‘4 இடியட்ஸ்’. இதில் புகழ், பிரக்யா நயன், திடியன், இந்திரன், ரவி மரியா, வின்சென்ட் அசோகன், ‘கும்கி’ அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு சுபாஷ் முனி ரத்தினம் இசையமைத்துள்ளார். அன்பே சிவம், புதுப்பேட்டை, கோகுலத்தில் சீதை, உன்னை நினைத்து உள்பட பல படங்களைத் தயாரித்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், அதன் நிறுவனர்கள் கே.முரளிதரன், சுவாமி நாதன் ஆகியோர் மறைவுக்குப்பின் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. கே. முரளிதரனின் மகன்களான எம். கோகுல் கிருஷ்ணன், டாக்டர் வத்ஸன் இணைந்து தயாரித்துள்ளனர்.
புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறோம் என நினைத்து முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் 4 பேரின் கதை இது. ஒரு வீட்டுக்குக் கொள்ளையடிக்க செல்லும் அவர்கள் அங்கு சிக்கிக் கொள்கிறார்கள். அங்கிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது படம்.
அறிமுக இயக்குநர் டி. அந்தோணி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. மனதை வருடும் காதல் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் டி. அந்தோணியுடன், மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளார்கள். பின்னணி இசையை ஜோயி ரிடா அமைத்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி எழுதியுள்ளனர்.
கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகளவில் ரூ.215 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழில் வெளியீடு
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் தமிழ் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கால்பந்தாட்ட விளையாட்டு பின்னணியில் மலையாளத்தில் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ என்ற பெயரில் 2022ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. நிகில் பிரேம்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், பாலு வர்கீஸ், சாய்ஜு குருப் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்திருந்தார். ஒரு கிராமத்து மக்களின் கால்பந்து விளையாட்டு ஆர்வத்தை மையமாக கொண்டு உருவான படம்.
இந்த படம் 4 வருடங்களுக்கு பிறகு தற்போது ‘7 ஸ்டார் பாய்ஸ்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. அசோக் வெளியிடுகிறார். ‘7 ஸ்டார் பாய்ஸ்’ படம் நாளை வெளியாகிறது.