

பிரின்ஸ் பிக்சர்ஸ் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு வடபழனி விஜயா போரம் மாலில் உள்ள பேலசோ திரையரங்கில் நடைபெற்றது.
ஆர்யா பேசும்போது, “கதை கேட்கும்போது மிகப்பெரிய பிரம்மாண்டமாக இது இருக்கும் எனத் தோன்றியது. நம்மை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த தயாரிப்பாளராவது படம் எடுப்பாரா என சந்தேகத்துடன் தான் இந்தப் படத்துக்கு நான் ஓகே சொன்னேன். இயக்குநர் மனு ஒரு கடின உழைப்பாளி. இந்தப் படத்துக்காக மூன்று வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்திருக்கின்றோம். இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இந்த படத்தில் அவருக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு நிறையவே உள்ளது. படத்தின் முதல் காப்பி பார்த்தபோது நான் பிரமித்துப் போனேன். படத்தின் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் இந்தப் படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமில்லாமல் கோ டைரக்டர் ஆகவும் வேலை செய்துள்ளார்.
எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கவுதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன். கவுதம் நடித்துள்ள அந்த கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம். நீங்கள் படம் பார்த்து பிறகு கவுதமை அனைவரும் புகழ்வார்கள். புதுமையாகவும் ரசிக்கும்படியாகவும் நடித்துள்ளார் கௌதம். சரத்குமார் சாருடன் எனக்கு முதல் காட்சியே ராஜஸ்தானில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார். மஞ்சு வாரியரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தபோது நான் ரொம்ப சந்தோஷம் அடைந்து விட்டேன். அவரிடம் சென்று நாம் ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கூட கேட்டேன். மஞ்சு வாரியரின் நடிப்பு நம் அனைவருக்கும் தெரியும் அவ்வளவு அழகாக சிறப்பாக நடித்துள்ளார். அதுல்யா மற்றும் ரைஸா இருவருக்குள்ளேயும் படத்திற்குள் ஒரு போட்டி இருக்கிறது. மிஸ்டர் எக்ஸ் திரையரங்குக்கு வருபவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்” என்று கூறினார்.