நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கு.. ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

ரேணுகாசாமி கொலை வழக்கில் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் நடிகர் தர்ஷன் மனு தாக்கல் செய்திருந்தார்.
நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கு.. ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு
Published on

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த கொலையில் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்திருந்தது. இதனால் கடந்த 8½ மாதங்களாக அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், ரேணுகாசாமி கொலை வழக்கில் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் நடிகர் தர்ஷன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்திவாலா மற்றும் பிஷ் னோய் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அப்போது தர்ஷன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.

அவர் வாதிடுகையில், இந்த வழக்கு விசாரணை பெங்களூரு கோர்ட்டில் கடந்த 8 மாதங்களாக நடக்கிறது. அதில் 273 சாட்சிகளுக்கு பதில் இதுவரை வெறும் 15 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை முடிந்துள்ளது. மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை. எனவே சாட்சிகளிடம் விசாரிப்பது தாமதமாவதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தர்ஷன் ஒரு நடிகர் ஆவார். அவருக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து, நடிகர் தர்ஷன் மீதான கொலை வழக்கில் இதுவரை எத்தனை சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது, இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது, கொலை வழக்கு விசாரணை முடிய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும், தர்ஷனுக்கு சிறையில் என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பவை குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இன்னும் ஒரு வாரத்தில் கர்நாடக அரசு இதுபற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com