

தமிழ் சினிமாவில் வில்லனாக அறியப்பட்ட ‘ஜெயிலர்’ பட நடிகர் விநாயகன் தனது வாழ்க்கையில் நடந்த வேதனை பக்கங்களை பகிர்ந்திருக்கிறார்.
மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ‘திமிரு’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விநாயகன். இவர் எல்லாம் அவன் செயல், சிலம்பாட்டம், காளை, மரியான், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2023ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்தன் மூலம் பட்டித்தொட்டியெங்கும் விநாயகன் புகழ் பரவியது. மலையாளத்திலும் தனக்கென தனியிடம் பிடித்த அவர், கடந்த சில ஆண்டுகளாகவே கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சறுக்கலை உண்டாக்கியுள்ளது.
மது அருந்தி விட்டு வழக்குகளில் அடிக்கடி சிக்குவது நடிகர் விநாயகனின் வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. ஐதரபாத் விமான நிலையத்தில் மதுபோதையில் பாதுகாப்புப்படை அதிகாரியுடன் வாக்குவாதம் செய்து கைதானார். மது போதையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தகராறு மற்றும் சில சம்பவங்கள் அவரை போலீஸ் நிலையம் வரை கொண்டு சென்று நிறுத்தியது. சமீபத்தில் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சைக்குள்ளானார்.
இந்த நிலையில் தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாக நடிகர் விநாயகன் கூறியிருக்கிறார். அண்மையில் அளித்த பேட்டியில், “ எனது திருமணம் காதல் திருமணமாகும். நாங்கள் இருவரும் 40 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால் இப்போது நாங்கள் பிரிந்துவிட்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. சண்டைகள் எதுவும் இல்லை, ஆனால் எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. நான் மனம் திறந்து பேச வேண்டிய ஒரே நபர் என் மனைவிதான். இப்போது அப்படி யாரும் இல்லை.
என் தவறால்தான் என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்றாள். என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் தனியாக, நொறுங்கிப் போயிருக்கிறேன். என்னால் வெளியே செல்லவும் முடியவில்லை. அது என் பிரச்சினை, அவளுடையதல்ல. அவள் இன்னும் என் எல்லாப் பொருட்களையும் பார்த்துக்கொள்கிறாள். பிரிந்து செல்வதே நல்லது என்று எனக்குத் தோன்றியது, இல்லையென்றால் என் மனைவிக்கு பிரச்சினைகள் வந்துவிடும். நான் அவரின் நிம்மதியைக் கொடுக்கப் போவதில்லை. அவரின் வாழ்க்கையை அவர் வாழட்டும். இதுதான் அவருக்கும் எனக்கும் சிறந்தது. ஒன்றாக வாழ முடியாத நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவு செய்தோம், என்றாலும் என் மனைவியிடம் மட்டுமே எனது மனக்குமுறல்களை கொட்ட முடியும். அவரிடமிருந்து ஏற்பட்ட அந்நியப்படுதல் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் இருண்ட காலகட்டத்திற்குத் என்னை தள்ளியது” என்று விநாயகன் வேதனையாக கூறியிருக்கிறார்.