ஈழத்தமிழர் நலனுக்காக என் மகள் திவ்யா தொடர்ந்து உழைப்பார் - நடிகர் சத்யராஜ்

பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் திட்டத்தில் ஈழத்து செல்வா பேத்தியுடன் தனது மகள் இணைந்து செயல்படுகிறார் என்றும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக தன் மகள் தொடர்ந்து உழைப்பார் என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
ஈழத்தமிழர் நலனுக்காக என் மகள் திவ்யா தொடர்ந்து உழைப்பார் - நடிகர் சத்யராஜ்
Published on

நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செல்வாவின் பேத்தியுடன்...

இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் என்ற பெயரில், ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரஹாசனும், என் மகள் திவ்யாவும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தத்திட்டத்தில் பயனுள்ள விஷயங்கள் அடங்கியிருக்கிறது.

முதலாவது, குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் மற்றும் விவசாயம் என்ற அற்புதமான தொழிலை கற்றுக்கொள்வது அதில் அந்த குழந்தைகளின் பெற்றோரையும் ஈடுபடச்செய்வது எனப்பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது. அவர்களுக்கு ஒரு புதிய தொழிலை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அமைய இருக்கிறது. இந்தப்பணிகளில் பூங்கோதை சந்திரஹாசனும், என் மகள் திவ்யாவும் இணைந்து செயல்படுவதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

தொடர்ந்து உழைப்பார்

இந்தநேரத்தில், எம்.ஜி.ஆரின், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

ஈழத்தமிழர்களின் நலனுக்காக என் மகள் திவ்யா தொடர்ந்து உழைப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com