‘ஆன்லைனில் எனது மகளுக்கு நடந்த கசப்பான அனுபவம்...’- நடிகர் அக்‌ஷய் குமார் வேதனை


‘ஆன்லைனில் எனது மகளுக்கு நடந்த கசப்பான அனுபவம்...’- நடிகர் அக்‌ஷய் குமார் வேதனை
x

பள்ளிகளில் சைபர் பாதுகாப்பு குறித்து நமது குழந்தைகள் படிக்க வேண்டும் என அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.

மும்பை,

மும்பையில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் நேற்று சைபர் விழிப்புணர்வு தொடா்பான நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நடிகர் அக்சய் குமார் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அக்சய்குமார் ஆன்லைனில் தனது மகளுக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;-

“எனது மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடினாள். ஆன்லைனில் முன்பின் தெரியாத நபருடன் கூட விளையாட முடியும். அந்த கேம் மூலம் ஒருவர் எனது மகளிடம் பேசி உள்ளார் ஆரம்பத்தில் மிகவும் இயல்பாக அந்த நபர் பேசி உள்ளார். நீ நன்றாக விளையாடுகிறாய், அருமை, நன்றி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்.

ஒரு நாள் அந்த நபர், எனது மகளிடம் `நீ ஆணா, பெண்ணா?' என கேட்டு இருக்கிறார். எனது மகள் அவரிடம் நான் பெண் என கூறியுள்ளார். அதன்பிறகு அவரின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் அந்த நபர், என் மகளிடம் நிர்வாண படம் அனுப்புமாறு கேட்டு இருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எனது மகள் உடனடியாக செல்போனை அணைத்துவிட்டு நடந்ததை எனது மனைவியிடம் கூறியிருக்கிறாள்.

இப்படி தான் எல்லாம் தொடங்குகிறது. இதில் சிறந்த விஷயம் என்னவென்றால் எனது மகள், மனைவியிடம் பேசியது தான். எனது மகளுக்கு நடந்தது சைபர்குற்றத்தின் ஒரு பகுதி தான். சில சம்பவங்களில் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். பள்ளிகளில் நாம் கணிதம், வரலாறு படிக்கிறோம்.

எனவே சைபர் பாதுகாப்பு குறித்து நமது குழந்தைகள் படிக்க வேண்டும். மராட்டியத்தில் சைபர் பாதுகாப்பு குறித்து 7 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு பாடவேளை கற்றுக்கொடுக்க வேண்டும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை கேட்டுக்கொள்கிறேன். தெருவில் நடக்கும் குற்றங்களை விட சைபர் குற்றங்கள் மிகப்பெரியது. அதை நாம் தடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story