என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது - முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சாந்தனு பாக்கியராஜ்

பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு, விஜய்க்கு நன்றி தெரிவித்த உருக்கான பதிவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது - முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சாந்தனு பாக்கியராஜ்
Published on

பாக்கியராஜ் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் தான் நெகிழ்ந்து விட்டதாக சாந்தனு, விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கடந்த 27ம் தேதி காலை மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 73. பாக்யராஜ் மறைவு செய்தி திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல்-அமைச்சர் விஜய் அஞ்சலி

மறைந்த பாக்யராஜ் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தினர். முதல்-அமைச்சர் விஜய் நேரில் வந்து பாக்யராஜின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், துக்கத்தில் உடைந்து நின்றிருந்த பூர்ணிமா, சாந்தனு மற்றும் குடும்பத்தினரிடம் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அரசு மரியாதையுடன் பாக்யராஜின் இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றன. போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன், தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சாந்தனு பதிவு

இந்த நிலையில், நடிகரும் பாக்யராஜின் மகனுமான சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்குத் தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதி வரை நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி அண்ணா” என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com