எனது வாழ்க்கையின் பெரிய தூண் அம்மாதான் - ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகவுள்ளது.
எனது வாழ்க்கையின் பெரிய தூண் அம்மாதான் - ஜேசன் சஞ்சய்
Published on

தனது வாழ்க்கையில் அம்மாதான் 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியும் நினைத்துக்கொண்டிருப்பார் என்று ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். . மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படம் அக்டோபர் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில்வெளியாக உள்ளது.

ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், படம் குறித்த புரமோஷன் நிகழ்வுகளில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அதில் தனது குடும்பம் குறித்து பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த நேர்காணலில் “எனது வாழ்க்கையின் பெரிய தூண் எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார். நான் ஒருநாள் அவருக்கு போன் செய்ய மறந்துவிட்டால், அவரே எனக்கு போன் செய்து, ‘இன்று என்ன நடந்தது? எப்படி இருக்கிறாய்?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார். எனது அப்பா, அம்மாவிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள எனக்கு தயக்கமாகத்தான் இருக்கும். அவர்கள் அந்த அளவுக்கு எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால் எனது சகோதரியிடம் மட்டும் என்னுடைய எல்லா விஷயங்களையும் மனம் திறந்து பேசுவேன்.

ஒருபுறம் எனக்கு நிறைய அன்பு கிடைக்கிறது, அதே சமயம் இயல்பாகவே என் மீது பல எதிர்பார்ப்புகளும் உள்ளன. எனவே, நான் நேர்மறையான கருத்துகளை மட்டுமே எடுத்துக்கொள்வேன். திரையுலகிற்குள் நுழைவது எனக்கு எளிதாக இருந்தது என்பது போன்ற எதிர்மறையான கருத்துகள் வந்தால், அவற்றைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். மக்கள் படத்தைப் பார்க்கும்போது, அந்தப் படத்தை மட்டுமே பார்ப்பார்கள். அந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பதைப் பற்றி அவர்கள் பேசப்போவதில்லை” என்றார்.

தமிழக முதல்-அமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் ஆஜரான அவர், வழக்கை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, கோர்ட்டு வழக்கை முடித்து வைத்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com