'பெற்றோர் சரியான நேரத்தில் வந்ததால் தப்பித்தேன்'...சிறுவயது கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஷிவாங்கி

நடிகையாக வேண்டும் என்ற தனது ஆசையை பயன்படுத்தி அந்த நபர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறினார்.
ஷிவாங்கி ஜோஷி
Published on

மும்பை,

பிரபல சின்னத்திரை நடிகை ஷிவாங்கி ஜோஷி, சிறுவயதில் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தனது தாயாரின் நெருங்கிய நண்பர் ஒருவரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி தகவல்

'லாக் அப் 2' நிகழ்ச்சியில் பேசிய ஷிவாங்கி ஜோஷி, நடிகையாக வேண்டும் என்ற தனது ஆசையை பயன்படுத்தி அந்த நபர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறினார்.

"நடிக்க வேண்டுமானால் கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்" என்று கூறி, காரின் முன்பகுதியில் தனது மடியில் அமர வைத்து எல்லை மீறி நடக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.

பெற்றோர் காப்பாற்றிய தருணம்

மேலும், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்த அந்த நபர், "சினிமாவில் பல்வேறு காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும்" என்று கூறி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறினார். அப்போது அவரை தள்ளியபோது, கோபத்தில் தன்னை கீழே தள்ளியதாகவும் தெரிவித்தார். அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த பெற்றோர், அவரை வெளியேற்றியதாகவும் நினைவுகூர்ந்தார்.

நீண்ட கால மன உளைச்சல்

இந்த சம்பவத்திற்குப் பிறகு, வீட்டை விட்டு வெளியே செல்லவும், பள்ளிக்கு செல்லவும் பயந்து நீண்ட நாட்கள் வீட்டிலேயே இருந்ததாக ஷிவாங்கி வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த அனுபவம் தனது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com