நடிகர் சங்க தேர்தல் வழக்கு: ஜூலை 1-ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தின்படி நிர்வாகிகள் பதவியில் நீடிப்பது சட்டவிரோதமானது என்று வழக்கு தொடரப்பட்டது.
நடிகர் சங்க தேர்தல் வழக்கு: ஜூலை 1-ம் தேதி  சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
Published on

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் வரும் ஜூலை 1ம் தேதி தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் (தலைவர்), விஷால் (பொதுச்செயலாளர்) மற்றும் கார்த்தி (பொருளாளர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது அதிகாரப்பூர்வ 3 ஆண்டு பதவிக்காலம் கடந்த 2025 மார்ச் 19 அன்று முடிவடைந்தது.

எனினும், கடந்த 2024 செப்டம்பர் 8 அன்று நடந்த நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டத்தில் இவர்களின் பதவிக்காலத்தை 2028 வரை நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் கடந்த 2025 அக்டோபர் 14 அன்று இவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து அரசாணை வெளியிட்டது.

இந்தத் தீர்மானத்தை எதிர்த்து நடிகர் சங்கத்தின் உறுப்பினரான வி. நம்பிராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டி ல் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவரது மனுவில், “நடிகர் சங்க விதிமுறைகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் பதவிக்காலத்தை நீட்டிப்பது சட்டவிரோதமானது. எனவே, தேர்தல் நடத்தாமல் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் பதவியில் நீடிப்பதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த சிவில் வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஏ.டி.மரியா கிளேட் விசாரித்தார். தமிழக அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்து இவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ள நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தல் வழக்கில் சென்னை ஐகோர்ட் வரும் ஜூலை 1-ஆம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. தற்போதைய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் 2028 ஆம் ஆண்டு வரை தொடர்வார்களா? அல்லது நீதிமன்றம் புதிய தேர்தலுக்கு உத்தரவிடுமா என்பது ஜூலை 1 அன்று வெளியாகும் தீர்ப்பில் தெரியவரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com