

சென்னை,
புராணம், மர்மம், அமானுஷ்ய சக்திகள் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, தற்போது 'விருஷகர்மா' திரைப்படத்தில் நடித்துள்ளார். 'விருபாக்ஷா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். புராணம், மர்மம், அமானுஷ்ய சக்திகள் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
புதையல் தேடும் பயணத்தில் ஈடுபடும் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்துள்ளார். 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மர்ம சக்தி ஒன்று மீண்டும் விழித்தெழுவதுடன் கதைக்களம் திருப்பம் பெறுகிறது. மனித குலத்தையே அச்சுறுத்தும் அந்த அமானுஷ்ய சக்தியின் பின்னணியை கண்டறிந்து, அதன் ஆபத்தில் இருந்து உலகைக் காப்பாற்றும் முயற்சியில் அர்ஜுன் ஈடுபடுகிறார். வேத அறிவியல், பழங்கால ரகசியங்கள், அமானுஷ்ய சக்திகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு டிரெய்லர் அமைந்துள்ளது. இறுதியில், படத்தின் பெயரான 'விருஷகர்மா' என்ற தெய்வீக சக்தியாக நாக சைதன்யா மாறுவது குறித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு, இப்படத்தில் இதுவரை பார்த்திராத வகையிலான காட்சிகளை உருவாக்கியிருப்பதாக டிரெய்லர் உணர்த்துகிறது. பழங்கால குகைகள், மர்மமான உருவங்கள், அமானுஷ்ய சக்திகளின் தாக்கம் என ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக அமைந்துள்ளது. குறிப்பாக, ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. நாக சைதன்யாவும் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான தோற்றத்தில் தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும், ஜெயராம், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, கியாரா கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுவது கவனம் ஈர்க்கிறது. பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரிப்பில், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படம் உருவாகியுள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள 'விருஷகர்மா' திரைப்படம் வரும் டிசம்பர் 4-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான கதைக்களமும் பிரமாண்ட காட்சிகளும் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.