15 ஆண்டுக்குப் பின் பாலிவுட்டில் நாகர்ஜூனா

அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் முந்தைய தலைமுறை கதாநாயகர்களில் ஒருவர், நாகர்ஜூனா.
15 ஆண்டுக்குப் பின் பாலிவுட்டில் நாகர்ஜூனா
Published on

நாகர்ஜூனா தனது இரண்டு மகன்கள் சினிமாத் துறைக்குள் நுழைந்த பிறகும்கூட, இன்றைய இளைய தலைமுறை கதாநாயகர்களோடு போட்டி போட்டபடி முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் தனித்துவம் வாய்ந்தவர்.

நாகர்ஜூனாவுக்கு தெலுங்கு சினிமா தான் பிரதானம் என்றாலும், தமிழ், இந்தி என பல மொழிகளிலும் தனது முத்திரையை பதித்திருப்பவர். இவர் தற்போது இந்தியில் பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நாகர்ஜூனாவுக்கு பாலிவுட் ஒன்றும் புதிது அல்ல. 28 ஆண்டுகளுக்கு முன்பு சிவா படத்தின் வாயிலாக பாலிவுட் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் தான். ராம்கோபால்வர்மா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான சிவா மிகப்பெரிய வெற்றிப்படம். அந்த வெற்றியை டப்பிங் மூலமாக இந்திக்கு கொண்டு சென்றனர். அதே பெயரில் இந்தியிலும் வெளியானது. சிவா படத்தையும், அதில் நடித்த நாகர்ஜூனாவையும் பாலிவுட் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

அதன் பலனாக அவருக்கு நேரடியாக பாலிவுட் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குதா ஹவ்வா என்ற அந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி ஆகியோருடன் இணைந்து நடித்தார் நாகர்ஜூனா. 1992-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை முகுல் எஸ்.ஆனந்த் இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து மிஸ்டர் பேக்ரா, ஸாக்கம், அங்காராய், அக்னிவர்ஷா என குறிப்பிட்ட இடைவெளியில் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.

இறுதியாக கடந்த 2003-ல் வெளியான எல்.ஓ.சி. கார்கில் என்ற படத்தில் நடித்திருந்தார். ஜே.பி.தத்தா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நாகர்ஜூனாவோடு, சஞ்சய் தத், அஜய்தேவ்கன், சயிப் அலிகான், சுனில் ஷெட்டி, ராணி முகர்ஜி, கரீனாகபூர், இஷா தியோல், ரவீணா தாண்டன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கார்கில் போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.

இந்த நிலையில்தான் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் கரன் ஜோகர் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாஸ்திரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நாகர்ஜூனா. இந்தப் படத்தின் மூலமாக அமிதாப்பச்சனுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். அமிதாப், நாகர்ஜூனா தவிர, ரன்பீர் கபூர், அலியா பட், மவுனிராய், டிம்பிள் கபாடியா போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி. இவர் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தாத்தா சாசதர் முகர்ஜி, மிகப்பெரிய தயாரிப்பாளர். தில் தேகே தேகோ, லவ் இன் சிம்லா, லீடர் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். அயன் முகர்ஜியின் தந்தையான டெப் முகர்ஜி, வங்காள திரைப்படத் துறையில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளான கஜோல், ராணி முகர்ஜி உள்ளிட்டோர் அயன் முகர்ஜியின் உறவினர்கள்.

தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், அயன் முகர்ஜிக்கு இயக்கத்தின் மீதுதான் ஆர்வம். அதன் காரணமாக படிப்பை முடித்ததும், தனது அக்கா கணவரும், பாலிவுட்டின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவருமான அசுடோஸ் கவுரிகரிடம் 2004-ம் ஆண்டு உதவியாளராக சேர்ந்தார். அசுடோஸ் கவுரிகர் இயக்கத்தில் உருவான சுவாதேஷ் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இந்தப் படத்தில் ஷாருக்கான், காயத்ரி ஜோஷி ஆகியோர் நடித்திருந்தனர்.

பின்னர் அயன் முகர்ஜிக்கு, பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வரும் கரன் ஜோகரின் நட்பு கிடைத்தது. 2006-ம் ஆண்டு கரன் ஜோகர் இயக்கிய கபி அல்விட நா ஹேக்னா என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான், ராணி முகர்ஜி ஆகியோர் நடித்திருந்தனர்.

அதன்பிறகு 3 ஆண்டுகள் சினிமாத் துறையை விட்டு ஒதுங்கியிருந்த அயன் முகர்ஜி, மீண்டும் கரன் ஜோகரிடம் வந்து சேர்ந்தார். அப்போது கரன் ஜோகர், வேக் அப் சித் என்ற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதும் பொறுப்பை அயன் முகர்ஜியிடம் ஒப்படைத்தார், கரன் ஜோகர். அவர் எழுதிய திரைக்கதை பாணியைப் பார்த்து விட்டு, இந்தப் படத்தை நீயே இயக்கிவிடு என்று கூறிவிட்டார் கரன்ஜோகர்.

அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார் அயன் முகர்ஜி. நகைச்சுவை படமாக உருவாகிய வேக் அப் சித் படத்தில் ரன்பீர் கபூர், அனுபம்கேர், கொங்கனா சென் சர்மா ஆகியோர் நடித்திருந்தனர். 2009-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றதுடன், அயன் முகர்ஜிக்கு சிறந்த புதுமுக இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுத்தந்தது.

அதன்பிறகு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கதையோடு வந்தார் அயன் முகர்ஜி. இந்த முறை ரொமாண்டிக் கதை. இந்தப் படத்தையும் தானே தயாரிப்பதாக கரன்ஜோகர் தெரிவித்தார். மீண்டும் அதே கூட்டணி. படத்தின் கதாநாயகனும் ரன்பீர் கபூர்தான். கதாநாயகி- தீபிகா படுகோனே. 2013-ம் ஆண்டு வெளியான யே ஜாவானி ஹே தீவானி என்ற அந்தப் படம், 7 நாட்களில் 100 கோடி என்ற வசூலை எட்டி சாதனை படைத்தது.

இப்படி அயன் முகர்ஜி இயக்கிய இரண்டு படங்களும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள் என்பதால், மீண்டும் 4 வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பிரம்மாஸ்திரா படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த முறை அயன் முகர்ஜி கையில் எடுத்திருப்பது, அதீத கற்பனை கலப்பு கொண்ட கதைக்களம் (பேண்டஸி) அமைந்த ஒரு கதை என்கிறார்கள். அதுவும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியிருக் கிறது.

மூன்றாவது முறையாக தன்னுடைய ஆஸ்தான தயாரிப்பாளர், தன்னுடைய முந்தைய இரண்டு படங்களிலும் இருந்த ரன்பீர் கபூர் என்று சிறிய செண்டிமெண்டோடு, பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப், தெலுங்கில் உச்ச நட்சத்திரமான நாகர்ஜூனா ஆகியோரையும் இணைத்திருப்ப தால் இந்தப்படம் எப்படியிருக்கப் போகிறது? என்ற ஆர்வம் பாலிவுட் ரசிகர்களைப் போலவே, இந்திய திரைப்பட ரசிகர்கள் அனைவரை யுமே பற்றிக்கொண்டுள்ளது.

பல்கேரியா மற்றும் லண்டன் போன்ற பகுதிகளில் பிரம்மாஸ்திரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com