'நந்தன்' திரைப்படம் ஜனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் - இயக்குநர் கோபி நயினார்

‘நந்தன்’ திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால்… தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை இப்படத்திற்கு வழங்க வேண்டும் என இயக்குநர் கோபி நயினார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
'நந்தன்' திரைப்படம் ஜனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் - இயக்குநர் கோபி நயினார்
Published on

சென்னை,

இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில் சசிக்குமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நந்தன். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியானது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு தமிழ்நாட்டின் உயரிய சிறப்பு கலை விருதினை வழங்க வேண்டும் என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

"இந்தியாவில் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டிருக்கும் ஜனநாயக உரையாடலான, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தை, நேர்மையான திரைகதையின் வழியாக தன் சொந்த மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறது "நந்தன்". இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், நடித்தவர்கள் எல்லோருமே சமூகப் பொறுப்புள்ளவர்களாகவே இருந்தார்கள் என்பதுதான். குறிப்பாக இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி.

"இன்னும் சாதி இருக்கிறதா என கேட்பவர்களுக்கு, என்னுடன் வாருங்கள் இந்தியாவில் சாதி இருக்கிறது என்று அழைத்துச் சென்று காட்டுகிறேன்…" என்ற வாசகத்துடன் துவங்குகிறது இத்திரைப்படம்.

ஜனநாயகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இயக்குநர் இரா.சரவணனின் தைரியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். காலணிக்குள் இன்னும் அனுமதிக்கப்படாத நந்தன் எனும் தேரை, தன் முதுகில் சுமந்து வந்த இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரை, இன்னும் நாடு முழுவதும் கொடியேற்ற முடியாமல், நாற்காலியில் அமர முடியாமல், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நுழைய அனுமதிக்காத படி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட எண்ணற்ற தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் சார்பாக நெஞ்சுயர்த்தி நன்றியை சொல்லிக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பணிவான வேண்டுகோள் ; நந்தன் எனும் இத்திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால்… தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை நந்தன் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நந்தன் திரைப்படத்தை காண வேண்டிய சமூக அரசியலுக்கான அவசியத்தை உணரும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு அறிவுறுத்தலை வழங்குவது என்பது சமூக நீதியோடு தொடர்புடையது என்பது என் பணிவான கருத்து.

நந்தன் திரைப்படம் ஜனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் என்பதால், இளம் தலைமுறையினருக்கும், மாணவ, மாணவியருக்கும் போய் சேர வேண்டிய அவசியம் கருதி, அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வழியாக நந்தன் திரைப்படத்தை காண வழிவகை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com