'தி பாரடைஸ்'-'பெத்தி' பாக்ஸ் ஆபீஸ் மோதல் குறித்து பேசிய நானி

'தி பாரடைஸ்' படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நானி, தற்போது நடித்து முடித்துள்ள படம் 'ஹிட் 3'. கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 1-ம் தேதி வெளியாக உள்ளது.
இது மட்டுமில்லாமல், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 'தி பாரடைஸ்' படத்திலும் நானி நடித்து வருகிறார். எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அதற்கு 1 நாள் பின்பு ராம் சரண் நடித்துவரும் 'பெத்தி' படம் வெளியாகிறது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் நானியின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோத இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், இந்த பாக்ஸ் ஆபீஸ் மோதல் குறித்து நானி பேசி இருக்கிறார். 'ஹிட் 3' படத்தின் புரமோசனில் இதனை பகிர்ந்தார். அவர் கூறுகையில்,
"'தி பாரடைஸ்' படத்தை மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். ஒத்திவைப்பு தொடர்பான எந்த முடிவையும் தயாரிப்பாளர்கள்தான் எடுப்பார்கள். ஆனால் இரண்டு படங்களும் திட்டமிட்டபடி வெளியானால், அவை பிளாக்பஸ்டர்களாக மாறும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்' என்றார்.






