ஜெய் பீம் இயக்குநருடன் இணையும் நானி

ஜெய் பீம் இயக்குநர் டிஜே ஞானவேல் அடுத்ததாக நானி நடிப்பில் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய் பீம் இயக்குநருடன் இணையும் நானி
Published on

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஞானவேல். அதற்கு முன்பு பத்திரிகையாளராக பணியாற்றிய ஞானவேல் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் கண்டார். வித்தியாசமான கதைக்களத்தில் 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை ஈர்த்தது. அதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு ஞானவேல் இயக்கிய படம் தான் ஜெய் பீம். சூர்யா, மணிகண்டன் நடிப்பில் ஒரு புரட்சிகரமான படமான ஜெய் பீம் 2021-ம் ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியாகி சக்கைபோடு போட்டது. மேலும் ஜெய் பீம் படத்தை தொடர்ந்து ரஜினியை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார் ஞானவேல்.

ஜெய் பீம் இயக்குனருடன் ரஜினி இணைகிறார் என்றதுமே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பஹத் பாசில், அமிதாப் பச்சன், ராணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினியின் மகனாக பஹத் பாசில் நடிப்பதாகவும், வில்லனாக ராணா நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தில் ராணாவிற்கு பதில் முதன் முதலில் தெலுங்கு நடிகர் நானி தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் நானி கால்ஷீட் பிரச்சனை காரணமாக வேட்டையன் படத்தில் நடிக்கமுடியாமல் போனது. இருப்பினும் நானிக்கு வேட்டையன் கதை மிகவும் பிடித்திருந்ததாம். இதையடுத்து ஞானவேலிடம், உங்களின் இயக்கத்தில் நான் நடிக்க விரும்புகிறேன். எனவே வேறேதேனும் கதை இருந்தா சொல்லுங்க என கூறியுள்ளார். உடனே ஞானவேல் வேறொரு கதையை கூறியுள்ளார். அக்கதையும் நானிக்கு மிகவும் பிடித்துப்போக இப்படத்தை நாம் பண்ணலாம் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில் ஞானவேல் வேட்டையன் படத்தை முடித்த பிறகு அடுத்ததாக நானியுடன் இணையவுள்ளார் என தகவல்கள் வருகின்றன. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com