

நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மார்ச் 26ம் தேதி வெளியாகிறது.
சுஜித் இயக்கத்தில் வெளியான ‘ஓஜி’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நானி படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில், நானி - சுஜித் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இப்படத்திற்கு ‘பிளடி ரோமியோ’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு குறித்த அனிமேஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். சமையல்காரர் போர்வையில் வாழும் ஒரு கேங்ஸ்டர் கதையாக ‘பிளடி ரோமியோ’ இருக்கும் என்று தெரிகிறது.
இப்படத்தில் நானி உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிருத்விராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தின் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு, கோடையில் தொடங்கப்படவுள்ளது.