

மும்பை,
நடிகை கத்ரீனா கைப்பின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு குரல் கொடுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப். இவர் நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் 7-ந் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காத கத்ரீனா கைப் சமீபத்தில் மும்பையில் உள்ள அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் கணவர் விக்கி கவுசலுடன் கலந்து கொண்டார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஏனெனில் நடிகை கத்ரீனா கைப் உடல் எடை கூடியிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை உருவக்கேலியும், கிண்டலும் செய்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை கத்ரீனா கைப்புக்கு ஆதரவாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
‘ஒரு பெண்ணின் வயது ஏன் எப்போதும் பொது விவாதமாகிறது? ஒரு பெண் குறிப்பிட்ட வயதைத் தாண்டியவுடன், சமூகம் அவரை அளவிடத் தொடங்குகிறது. அவர் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறாரா?’, ‘ஏன் வித்தியாசமாகத் தெரிகிறார்?’, ‘வயதாகிவிட்டதா?’ என பெண்களின் தோற்றத்தைச் சுற்றியே சமூகத்தின் கவனம் இருக்கிறது. அதே நேரத்தில், ஆண்களுக்கு வயதாகும்போது இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.
ஆண்களுக்கு வழுக்கை, நரை முடி வந்தால் யாரும் கண்டுக்கொள்வதில்லை, அதேபோல், 40 இன்ச் இடுப்பு சுற்றளவு வந்தாலும், அவரது வசீகரம் அல்லது இளமை என்ன ஆனது என்று யாரும் கேட்பதில்லை’ என தெரிவித்துள்ளார்.
குழந்தை பெற்ற பிறகு பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
தாய்மைக்கு பிறகு ஏற்படும் உடல், ஹார்மோன் மற்றும் உணர்வு ரீதியான மாற்றங்களை புரிந்துகொள்ளாமல், பெண்களின் தோற்றத்தை மட்டும் விமர்சிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
கத்ரீனா கைப்புக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த குஷ்பு, அவர் எப்போதும் அழகானவர்தான், இப்போதும் அழகாகதான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
தனது உடல் எடை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்ததாக தெரிவித்த குஷ்பு, ‘ஒரு பெண் எப்படி இருந்தாலும், வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், அவரை விமர்சிக்க ஏதாவது ஒன்றை சமூகம் கண்டுபிடித்துவிடுகிறது’ என பகிர்ந்துள்ளார்.