

நெல்லை,
திரிஷாவின் பெயரில் புதிய பேரவை தொடங்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பின்னர் மாடலிங் துறையில் கவனம் செலுத்திய திரிஷா, திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து, 'லேசா லேசா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 'சாமி', 'கில்லி', 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மங்காத்தா', 'அபியும் நானும்', 'கொடி', '96', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், நடிகை திரிஷாவின் பெயரில் நெல்லையில் புதிய பேரவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ‘புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், பேரவையின் சின்னத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தச் சின்னத்தில் நடிகை திரிஷா கையசைத்து வணக்கம் தெரிவிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், ‘பதவிக்காக அல்ல... மக்களின் உரிமைக்காக’ என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. திரிஷாவின் பெயரில் புதிய பேரவை தொடங்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.