அடுத்த ஜேம்ஸ் பாண்ட்? - விருப்பப்பட்டியலில் 3 இளம் நடிகர்கள்

'டூன்' பட இயக்குனரான டெனிஸ் வில்லெனுவே அடுத்த 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தை இயக்க உள்ளார்.
சென்னை,
அமேசானின் அடுத்த 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தில் நடிக்க மூன்று இளம் நடிகர்களின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. அதன்படி, டாம் ஹாலண்ட், ஜேக்கப் எலோர்டி மற்றும் ஹாரிஸ் டிக்கின்சன் ஆகியோர் அடுத்த படத்தில் நடிக்க படக்குழுவின் விருப்பப்பட்டியலில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் நடிகர்களுக்கும் படக்குழுவுக்கும் இடையே முறையான சந்திப்புகள் எதுவும் நடக்கவில்லை. மேலும் இது குறித்து அமேசான் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'டூன்' பட இயக்குனரான டெனிஸ் வில்லெனுவே அடுத்த 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தை இயக்க உள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான வில்லெனுவே, 'சிகாரியோ,' 'டூன்,' 'டூன்: பகுதி இரண்டு,' 'பிளேட் ரன்னர் 2049,' மற்றும் 'அரைவல்' போன்ற படங்களுக்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளார்.
ஆமி ஆடம்ஸ் மற்றும் ஜெர்மி ரென்னர் நடித்த அறிவியல் புனைகதை படமான 'அரைவல்' படத்திற்காக 2017 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த இயக்குனராகவும், எழுத்தாளர் பிராங்க் ஹெர்பர்ட்டின் மிகவும் பாராட்டப்பட்ட 1965 நாவலை அடிப்படையாகக் கொண்ட 'டூன்' படத்திற்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்காகவும் 2022 ஆஸ்கார் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டார்.






