

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான ‘பிரேமம்’ மிகப்பெரிய ஹிட் அடித்து அவரை தென்னிந்தியளவில் பிரபலப்படுத்தியது. இப்படம் மூலமே நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி ஆகியோருக்கு பெரிய வாய்ப்புகளும் அமைந்தன.
தொடர்ந்து, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய ‘கோல்டு’ படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இயக்குநர் பணியில் கவனம் செலுத்தினாலும் தற்போது அல்போன்ஸ் புத்திரன் நடிகராகவும் நடித்து வருகிறார். இறுதியாக, நிவினுடன் சர்வம் மாயா, வாழ 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
நிவின் பாலி, நயன்தாராவுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடன்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் எல்சியுவின் கீழ் இருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்திலும் நடித்துவருகிறார்.
அகில் சத்யன் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது. இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.
இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் பெயர் வருகிற ஜூன் 27 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இது, நிவின் பாலியின் 50-வது படம் என்பதாலும் பிரேமம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாலும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.