"அறக்கட்டளைக்கு இனி நன்கொடை வேண்டாம்" - வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்

இனி தனது அறக்கட்டளைக்கு யாரும் தங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"அறக்கட்டளைக்கு இனி நன்கொடை வேண்டாம்" - வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது சொந்த அறக்கட்டளை மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது சந்திரமுகி-2, ருத்ரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர், தனது அறக்கட்டளை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இனி தனது அறக்கட்டளைக்கு யாரும் தங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது;-

"அனைவருக்கும் வணக்கம், நான் இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் சந்திரமுகி-2 படத்திற்காக என் உடலை மாற்றிக் கொள்ள நான் எடுக்கும் ஒரு சிறு முயற்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தை கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எனக்கு வேண்டும்.

இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என் அறக்கட்டளைக்கும் ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்து உங்கள் நன்கொடைகளால் என் சேவைக்கு ஆதரவு கொடுத்தீர்கள். எனக்கு தேவைப்படும் போதெல்லாம் உங்கள் உதவியை பெற்று என்னால் முடிந்த உதவிகளை அறக்கட்டளை மூலம் செய்துள்ளேன்.

இப்போது, நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். மேலும் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறேன். எனவே, மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். இதனால் இனி என் அறக்கட்டளைக்கு யாரும் உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம். மாறாக உங்களின் ஆசீர்வாதம் எனக்கு போதும். இத்தனை ஆண்டுகளாக எனக்கு கிடைத்த ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com