"ஜனநாயகன்" படத்தில் என்ன பிரச்சினை என்று யாருமே சொல்லவில்லை- இயக்குனர் அமீர்

"ஜனநாயகன்" பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
"ஜனநாயகன்" படத்தில் என்ன பிரச்சினை என்று யாருமே சொல்லவில்லை-  இயக்குனர் அமீர்
Published on

மதுரை,

விஜய்யின் "ஜனநாயகன்" படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி அல்லோலப்பட்டு வருகிறது. கடந்த பொங்கல் ரிலீசாக வரவேண்டிய "ஜனநாயகன்", சென்சார் குழு படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்ததால், நீதிமன்றம் சென்றது படக்குழு. கோர்ட் உத்தரவுக்கு பிறகு மீண்டும் சென்சார் போர்டுக்கே சான்றிதழ் கேட்டு சென்றது. சென்சார் போர்டு தற்போது படத்தை பார்த்துவிட்டு தேர்தல் ஆணைய பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நடத்தை விதி உள்ளதால் விஜய்யின் "ஜனநாயகன்" படம் தேர்தலுக்கு முன்பாக ரிலீஸ் ஆகுவது சந்தேகம் என்றே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் "ஜனநாயகன்" பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் கூறியதாவது:

தேர்தல் ஆணையம் உச்சபட்ச அதிகாரத்தை கொண்டுள்ளது. இதுவரை தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நேரத்தில் எந்த திரைப்படமும் நிறுத்தப்பட்டதே இல்லை. முதல்முறையாக தமிழ்நாட்டில் அப்படியொரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. விஜய் திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தை தணிக்கை வாரியமும் சொல்லவில்லை. படக்குழுவும் சொல்லவில்லை. "விஸ்வரூபம்" திரைப்படம் வரும் போது சிறுபான்மை மக்களின் மனதை பாதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக அந்தப் படத்தை பார்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் "ஜனநாயகன்" படத்தில் என்ன பிரச்சனை என்று யாரும் சொல்லவில்லை. அதுவொரு மறைமுக அஜெண்டாவாகவே இருக்கிறது.

"ஜனநாயகன்" ஒரு ரீமேக் படம். தணிக்கைத் துறைக்கு காட்சிகளை கட் செய்ய அதிகாரம் இல்லை. அது சான்றிதழ் வழங்கும் போர்டுதான். கட் விவரங்களை அதிகாரப்பூர்வ கடிதத்தில் கொடுப்பதில்லை; வெள்ளைத் தாளில் எழுதிக் கொடுப்பார்கள்.

"ஜனநாயகன்" விவகாரத்தில் அரசியல் நடவடிக்கை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் கூட்டணிக்கு சென்றிருந்தால், இந்த பிரச்சனை வந்திருக்குமா என்பது தெரியவில்லை. அதனை விஜய் தரப்பே தான் சொல்ல வேண்டும். படத்தில் என்ன இருக்கிறது என்பதை சொல்ல மறுப்பதே இங்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. எப்போதும் அடிச்சவன் சொல்ல மாட்டான்; அடி வாங்குனவனாவது சொல்லணும் அல்லவா.. இதற்காகதான் அடிக்கிறார்கள் என்று. நாம் யூகத்தில் பேச முடியாது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com