“அழைத்தாலும் எந்த பதிலும் இல்லை”.. ‘பென்ஸ்’ படக்குழு மீது நிவின் பாலி அதிருப்தி

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

“அழைத்தாலும் எந்த பதிலும் இல்லை”.. ‘பென்ஸ்’ படக்குழு மீது நிவின் பாலி அதிருப்தி
Published on

சென்னை,

‘பென்ஸ்’ படக்குழுவினர் மீது நடிகர் நிவின் பாலி அதிருப்தி தெரிவித்துள்ளார். அதாவது, ‘பென்ஸ்’ படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக தனது கடைசி இரண்டு படங்களிலும் ஒரே தோற்றத்தில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

எல்.சி.யு-வில் இணையும் ‘பென்ஸ்’

லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

‘ரெமோ’, ‘சுல்தான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன், ‘பென்ஸ்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU)-ன் ஒரு பகுதியாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ரவி மோகன், மாதவன், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.

படப்பிடிப்பு தள்ளிப்போவதாக புகார்

‘பென்ஸ்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், படக்குழுவினர் மீது நடிகர் நிவின் பாலி அதிருப்தி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கடைசி 2 படங்களுமே ஒரே லுக்கில் நடித்துள்ளேன்”

இதுகுறித்து பேசிய நிவின் பாலி, ‘பென்ஸ்’ படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக தனது கடைசி இரண்டு படங்களிலும் ஒரே தோற்றத்தில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அழைத்தாலும் எந்த பதிலும் இல்லை”

தொடர்ந்து பேசிய நிவின் பாலி, “படக்குழுவினரை அழைத்தாலும் எந்தவித பதிலுமே இல்லை. இந்தப் பேட்டியைப் பார்த்தாவது எனது சூழலை புரிந்துகொண்டு முடிவு எடுங்கள்” என தெரிவித்துள்ளார். நிவின் பாலியின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், ‘பென்ஸ்’ படப்பிடிப்பு தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com