பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினை தொடர்ந்து நோரா பதேஹி-க்கு டெல்லி போலீசார் சம்மன்

நடிகை நோரா பதேஹி, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நாளை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Image Courtesy: Instagram @norafatehi/ Twitter @Asli_Jacqueline
Image Courtesy: Instagram @norafatehi/ Twitter @Asli_Jacqueline
Published on

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இதனால் இன்று நடிகை ஜாக்குலின் பெர்ண்டாஸ் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதனால் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று காலை 11.30 மணிக்கு ஆஜரானார். போலீசாரின் விசாரணை முடிந்து நடிகை ஜாக்குலின் இரவு 8 மணி அளவில் விசாரணை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது பதியப்பட்ட அதே வழக்கு தொடர்பாக நடிகை நோரா பதேஹி, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நாளை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை நோரா பதேஹிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுத்ததாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கில் நோரா பதேஹிக்கு ஜாக்குலினுடன் நேரடி தொடர்பு இல்லை என்றும், ஆனால் பிங்கி இரானியுடன் சேர்ந்து விசாரிக்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே செப்டம்பர் 2ம் தேதி, இதே வழக்கில் நோரா ஃபதேஹியிடம் டெல்லி போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com