

கொச்சி,
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் பாசி விற்று பிரபலமானவர் மோனலிசா. காந்த கண்ணழகி என அழைக்கப்படும் இவர், சமீபத்தில் இந்தி சினிமாவில் நடித்து இருந்தார். அவர், பர்மான்கான் என்பவரை காதலித்து கடந்த 11.3.2026 அன்று கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து கலப்பு திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையே மோனலிசாவுக்கு 18 வயது ஆகவில்லை என்றும், அவரை பர்மான்கான் கடத்தி வந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாகவும் மத்தியபிரதேச மாநிலம் மகேஷ்வர் போலீஸ் நிலையம், அம்மாநில முதல்-மந்திரியிடம் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோனலிசா, பர்மான்கான் ஆகியோர் கொச்சியில் இருப்பது தெரியவந்தது. அவர்களை விசாரணைக்காக மத்திய பிரதேசம் அழைத்து செல்வதற்காக அம்மாநில போலீசார் கொச்சி வந்தனர்.
இதற்கிடையே பர்மான்கானை வருகிற மே 30-ந் தேதி வரை கைது செய்ய கேரளம் ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. கொச்சி வந்த மத்திய பிரதேச மாநில போலீசாரிடம் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காளிராஜ் மகேஷ்குமார் ஐகோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு நகலை வழங்கினார்.
இதுகுறித்து கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காளிராஜ் மகேஷ்குமார் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக பர்மான்கானை கைது செய்ய மே 30-ந் தேதி வரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. அதுகுறித்த ஐகோர்ட்டு உத்தரவு நகல் மத்தியபிரதேச போலீசாரிடம் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் எதற்காக இங்கு வந்துள்ளனர் என்று தெரியவில்லை என்றார்.