

சென்னை,
திரையுலகில் தற்போது பல இளம் நட்சத்திரங்கள், சினிமாவில் நடிப்பதோடு மருத்துவ படிப்பையும் வெற்றிகரமாக முடித்து வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது மருத்துவ பட்டத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது ‘திரிஷ்யம் 3’ பட நடிகை ஷ்ரத்தா கோகுல் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஷ்ரத்தா கோகுல், குறிப்பாக ‘ஹலோ குட்டி சாத்தான்’ தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். சீரியல்களில் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தநிலையில், தனது படிப்பை பாதியில் நிறுத்த விரும்பாத அவர், நடிப்பிலிருந்து விலகி முழுமையாக மருத்துவ படிப்பில் கவனம் செலுத்தினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த ஷ்ரத்தா, பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தனது இன்டர்ன்ஷிப் பயிற்சியை நிறைவு செய்தார். அதன் பின்னர் மீண்டும் சினிமாவுக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த அவர், எதிர்பாராத விதமாக கொச்சியில் நடைபெற்ற ஒரு ஆடிஷனில் கலந்து கொண்டார்.
அதில் தேர்வானதை தொடர்ந்து இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது ‘வலது வஸ்தே கள்ளன்’ திரைப்படத்தில் ஷ்ரத்தாவுக்கு வாய்ப்பு வழங்கினார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தனது அடுத்த படமான திரிஷ்யம் 3-இல் செவிலியர் கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஷ்ரத்தாவை தேர்வு செய்துள்ளார்.
திரைப்படத்தில் செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷ்ரத்தா, நிஜ வாழ்க்கையில் டாக்டர் என்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.