எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 8 பேருக்கு சம்மன்

படக்குழுவை சேர்ந்த 8 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஓட்டேரி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 8 பேருக்கு சம்மன்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா தற்போது 'கில்லர்' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

திடீரென வெடித்த சிலிண்டர்

நேற்று வெடிகுண்டு வெடிப்பு மற்றும் புகைமூட்டம் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக கார்பன் டை ஆக்சைடு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. படப்பிடிப்பு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு, ஒரு சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் சிகிச்சை

இந்த விபத்தில் சிலிண்டர் அருகே பணியாற்றிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மதுரவாயலை சேர்ந்த மதன் (25) சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தினகரன், சூர்யா மற்றும் சக்திவேல் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 பேர் கைது

சம்பவம் தொடர்பாக கியாஸ் சப்ளை ஒப்பந்ததாரர் ராமு மற்றும் படப்பிடிப்பு தள பொறுப்பாளர் ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ஓட்டேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 பேருக்கு சம்மன்

இதனிடையே படப்பிடிப்பு நடத்துவதற்கு காவல்துறையிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பின்னி மில் மேற்பார்வையாளர் கண்ணன், படத்தின் சண்டை பயிற்சியாளர் உள்பட படக்குழுவை சேர்ந்த 8 பேருக்கு ஓட்டேரி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போலீசாரிடம் அனுமதி பெறாதது தொடர்பாகவும், விபத்து தொடர்பாகவும், படப்பிடிப்பின்போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும், உயிரிழந்த மதனின் உடல் அவரது பெற்றோரிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com