தீபிகா, ஆலியாவுக்கு ஒரு நியாயம்… எனக்கு வேறு நியாயமா? - ராதிகா ஆப்தே ஆதங்கம்

‘அக்கா’ இணையத் தொடரின் வெளியீட்டுப் பணிகளில் நடிகை ராதிகா ஆப்தே ஈடுபட்டு வருகிறார்.

தீபிகா, ஆலியாவுக்கு ஒரு நியாயம்… எனக்கு வேறு நியாயமா? - ராதிகா ஆப்தே ஆதங்கம்
Published on: 

மும்பை,

பாலிவுட்டில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறுவது சவாலாக இருப்பதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகளின் படங்களுக்கு கிடைக்கும் தொடக்கநாள் வரவேற்பு தனக்குக் கிடைப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம்

‘அந்தாதுன்’, ‘பர்ச்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் ராதிகா ஆப்தே. இவர் தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ள ‘அக்கா’ இணையத் தொடரின் வெளியீட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், திரைப்படங்களின் வெளியீடு மற்றும் வசூல் நிலவரம் குறித்து பேசிய அவர், ஒரு படம் திரையரங்குகளில் வெற்றி பெறுமா என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தீபிகா படுகோன் அல்லது ஆலியா பட் போன்ற நடிகைகள் நடித்தால் படத்துக்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும், தனக்கு அந்த அளவிலான தொடக்கநாள் வசூலைப் பெற்றுத் தரும் செல்வாக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்க வேண்டிய சூழல் உருவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்முறைப் படங்களில் விருப்பமில்லை

திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது ஓடிடி தளத்தில் வெளியாகிறதா என்பதைவிட, கதையின் தன்மைக்கே முக்கியத்துவம் அளிப்பதாக ராதிகா ஆப்தே கூறியுள்ளார். தற்போது வன்முறையை மையமாகக் கொண்ட படங்கள் அதிக வரவேற்பைப் பெறுவது குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தாயான பிறகு தனது வாழ்க்கை குறித்த பார்வை மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கும் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com