மோகன்லாலுக்கு எதிர்ப்பு : திரைப்பட விருது விழாவை புறக்கணிக்கும் நடிகைகள்

மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், பத்மபிரியா, ரேவதி உள்ளிட்ட பல நடிகைகள் அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
மோகன்லாலுக்கு எதிர்ப்பு : திரைப்பட விருது விழாவை புறக்கணிக்கும் நடிகைகள்
Published on

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் மீண்டும் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்து மலையாள நடிகைகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விலகினார்கள்.

நடிகைகள் ரேவதி, பத்மபிரியா உள்ளிட்ட நடிகைகள் மோகன்லால் முடிவை விமர்சித்து கடிதம் அனுப்பினார்கள். மஞ்சுவாரியர் தலைமையில் செயல்படும் பெண்கள் சினிமா கூட்டுக்குழுவும் கண்டித்தது. இந்த நிலையில் கேரள அரசு சார்பில் சிறந்த மலையாள சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா வருகிற ஆகஸ்டு 8ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மோகன்லாலை அரசு அழைத்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த நடிகர் நடிகைகள் உள்பட 107 பேர் கையெழுத்திட்டு கேரள முதல்மந்திரி பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அதில் திரைப்பட விருது விழாவில் விருது அளிக்கும் முதல்வரும் விருதை வாங்கும் கலைஞர்களும் மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக இருக்க முடியும். மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கூடாது என்று வற்புறுத்தி உள்ளனர். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com