

சென்னை
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் கூறியுள்ள்ளார்.
மேலும் தில் பேச்சாரா படத்தின் இயக்குநர் தன்னை சந்தித்த போது, பலரும் ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என சிலர் கூறியதாகவும், அவரை தடுத்ததாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தக் கருத்து தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு, திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய செய்தியைப் பகிர்ந்து நடிகரும், இயக்குநருமான சேகர் கபூர் தனது டுவிட்டர் பதிவில், "உங்களுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்குத் தெரிகிறதா ரஹ்மான்? நீங்கள் ஆஸ்கர் விருதைப் பெற்றதுதான். ஆஸ்கர் என்பது பாலிவுட்டுக்கு கானல் நீர் போன்றது. பாலிவுட்டைவிட நீங்கள் அதிக திறமை கொண்டவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது" என்று தெரிவித்தார்.
இயக்குநர் சேகர் கபூரின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான், "இழந்த பணம் திரும்ப வரும், புகழ் திரும்ப வரும். ஆனால், நம் வாழ்வில் முக்கியமான தருணங்கள் திரும்ப வராது. அமைதியாக இருங்கள். கடந்து செல்வோம். நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயங்கள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.