நம் ஒற்றுமைக்கு சக்தி இருக்கிறது, அந்த சக்திக்கு நோக்கமும் உண்டு - நடிகர் தனுஷ்

தனுஷ், தனது ரசிகர்களை மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, அவரது அரசியல் வருகை குறித்த ஊகங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
நம் ஒற்றுமைக்கு சக்தி இருக்கிறது, அந்த சக்திக்கு நோக்கமும் உண்டு -  நடிகர் தனுஷ்
Published on

சமீப காலங்களில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதனால் நடிகர் தனுஷ் விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனுஷ் வரும் 28ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ளார். நடிகர் தனுஷ் தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் வெற்றி மாறன் இயக்கும் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ், ‘ராயன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ரத்த தான நிகழ்வில் தனுஷ் பங்கேற்றார்.அப்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாக உள்ளது. அதில் அவர் “இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்கு பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னை சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்க கூடாது. உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு பிரச்சினை இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனை செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி, ஓம் நமச்சிவாய.. ” என தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருக்கும் விஜய் , முதலில் தனது ரசிகர் மன்றம் மூலமாக மக்களுக்கு பல உதவிகளை செய்து அதன் மூலமாகவே படிப்படியாக தவெக என்ற கட்சியை தொடங்கினார். விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஆதரவுதான் முதல்-அமைச்சர் அரியணையில் அமர வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். அந்த வகையில் தனுஷும் அப்படி ஒரு பாதையை தேர்வு செய்ய போகிறாரா என ரசிகர்கள் ஆர்வமடைந்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக வாக்குறுதி தந்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்நிலையில் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என பலரும் விவாதித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு தனி கொடி அறிமுகப்படுத்தி உள்ளார். அவருக்கும் அரசியல் ஆசை இருக்கிறது என்று தகவல் பரவியது. அந்த கொடி சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை என்ற வாசகமும் அந்த கொடி டிசைனில் இருந்தது. நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்தியதாக சொல்லப்பட்ட ரசிகர் மன்றக் கொடி பற்றி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் நடிகராக இருந்தபோது ரசிகர் மன்றக்கொடி இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டது

சமீப காலங்களில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஏரியா வாரியாக ரசிகர்களை வரவழைத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு உணவளித்து உபசரித்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com