“படையாண்ட மாவீரா” மேக்கிங் வீடியோ வெளியீடு


காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘படையாண்ட மாவீரா’ படம் செப்டம்பர் 19ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

கடந்த 1998-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான 'கனவே கலையாதே' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் வ.கவுதமன். இரண்டாவது படமாக 2010-ம் ஆண்டு வெளியான 'மகிழ்ச்சி' படத்தை இயக்கினார். இந்நிலையில், தற்போது வி.கே. புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் ஒன்றை இயக்கி படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல்கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில், 'மாவீரா' என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் 'படையாண்ட மாவீரா' என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இப்படம் மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'படையாண்ட மாவீரா' படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், இயக்குனர் கவுதமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இப்படம் கடந்த மே 23ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி கோர்ட்டு நடவடிக்கையால் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் கவுதமனின் ‘படையாண்ட மாவீரா’ படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story