

மூணாறு,
கேரளம் மாநிலம் மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 'படையப்பா' என்று அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை அவ்வப்போது உலா வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருகிறது. சாலைகள், தோட்டங்களில் சர்வ சாதாரணமாக நடமாடும் அந்த யானை, கடந்த காலங்களில் 20-க்கும் மேற்பட்டோரை மிதித்து கொன்றுள்ளது. இதுதவிர சாலைகளில் வரும் வாகனங்களை விரட்டுவதும், அவற்றை சேதப்படுத்துவதும் என தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மூணாறு பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். அதேபோல் சுற்றுலா பயணிகளையும் பாதுகாப்புடன் செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான அஜய் பூபதி இயக்கும் 'சீனிவாச மங்காபுரம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கடந்த சில நாட்களாக மூணாறு பகுதியில் நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று காலை மூணாறு அருகே குண்டலை பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திரைப்படத்தின் கதாநாயகன் ஜெயகிருஷ்ணன், கதாநாயகி ரோஷா ஆகியோரின் காதல் காட்சி படமாக்கப்பட்டது. 2 பேரும் காதல் காட்சியில் ஆர்வத்துடன் நடித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் 'படையப்பா' காட்டு யானை சினிமா படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்தது.
யானையை பார்த்ததும் நடிகர், நடிகை, இயக்குனர் மற்றும் படக்குழுவினர் என அனைவரும் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அந்த யானை சிலரை துரத்திக்கொண்டு ஓடியது. இருப்பினும் அருகில் இருந்த மன மகிழ் மன்றத்தின் கட்டிடத்துக்குள் சென்று அனைவரும் பதுங்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த மூணாறு வனத்துறையினர், காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட் டினர். அதன்பிறகே படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். தொடர்ந்து சினிமா படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. சினிமா படப்பிடிப்பு தளத்துக்குள் காட்டு யானை புகுந்த சம்பவம் மூணாறில் பரபரப்பை ஏற்படுத்தியது.