'பரமசிவன் பாத்திமா' திரைப்பட விமர்சனம்


பரமசிவன் பாத்திமா திரைப்பட விமர்சனம்
x

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள பரமசிவன் பாத்திமா படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் சாதி சண்டை மேலோங்க, கிராமமே மூன்றாக பிரிந்து கிடக்கிறது. இதற்கிடையே காதலர்களாக வலம் வரும் விமல் - சாயாதேவி ஜோடி, அந்த கிராமத்தில் சில இளைஞர்களை கொலை செய்கிறார்கள்.

இதையடுத்து விசாரணையில் களமிறங்கும் போலீஸ் அதிகாரி இசக்கி கார்வண்ணன், குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறுகிறார். ஒருகட்டத்தில் குற்றவாளிகளை நெருங்கும்போது திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. விமல் - சாயாதேவி ஜோடி ஏன் கொலைகளை செய்கிறார்கள்? கொலைகளுக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.

அழுத்தம் நிறைந்த கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார், விமல். அவரது ஆக்ரோஷமான இன்னொரு முகம் ஆச்சரியம். விமலுக்கு இணையாக சரிசமமான நடிப்பை கொடுத்து மிரட்டியிருக்கிறார், சாயாதேவி. பாதிரியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் எரிச்சலூட்டும் நடிப்பு, அவரது திரை அனுபவத்துக்கான முத்திரை.

காவல்துறை அதிகாரியாக இசக்கி கார்வண்ணன், வில்லனாக சுகுமார், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, விமல்ராஜ், மகேந்திரன், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை என அனைவரது நடிப்பிலும் எதார்த்தம் தெரிகிறது. பனி சூழ்ந்த பகுதிகளிலும் சுகுமாரின் ஒளிப்பதிவில் மெனக்கெடல் தெரிகிறது. தீபன் சக்ரவர்த்தியின் இசை ஆறுதல்.

எதார்த்த காட்சிகள் நிறைந்த படத்தில், மத பிரசாரத்தை முன்னிறுத்தும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். திரைக்கதையில் குழப்பம் கூடாது. பிரச்சினைக்குரிய கதைக்களத்தில் படத்தை இயக்கி, மதரீதியான பாகுபாடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்ற கருத்தை சமரசமின்றி சொல்லி தீர்த்துள்ளார், இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

பரமசிவன் பாத்திமா - சர்ச்சை நிச்சயம்

1 More update

Next Story