மம்முட்டியை சந்தித்து மறைந்த ஸ்ரீனிவாசனுடனான நினைவுகளை பகிர்ந்த பார்த்திபன்


மம்முட்டியை சந்தித்து  மறைந்த ஸ்ரீனிவாசனுடனான நினைவுகளை பகிர்ந்த பார்த்திபன்
x

உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீனிவாசனின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 69). கடந்த 48 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர். இயக்குனராகவும், நடிகராகவும் அறியப்பட்ட ஸ்ரீனிவாசன், திரைக்கதை ஆசிரியராகவும் செயலாற்றி வந்தவர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதித்த இவர், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பெற்ற வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் நேற்றுமுன்தினம் காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இதையடுத்து ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், மம்முட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். அந்தச் சந்திப்புக் குறித்து நடிகர் பார்த்திபன் அவருடைய சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை, ஒரு சிறிய தூக்கம் லேசாய்க் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ?துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் மம்முட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது. அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்முட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார். ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!! நட்பிற்கில்லை மொழி பேதங்கள். சில தவறுகள் அச்சேறியப் பிறகு சரி செய்தல் இயலவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

1 More update

Next Story