வசூலில் புது யுக்தியை கையாண்டதில் பாகுபலி 2 சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்த பதான் படம்

நடிகர் ஷாருக் கானின் பதான் படம் பாக்ஸ் ஆபீசில் பாகுபலி 2 வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.
வசூலில் புது யுக்தியை கையாண்டதில் பாகுபலி 2 சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்த பதான் படம்
Published on

புனே,

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவான படம் பதான். படம் திரையிடுவதற்கு முன்பிருந்து பல தடைகளை எதிர்கொண்டது.

இறுதியில் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று, கடந்த ஜனவரி 25-ந்தேதி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.

ஆக்சன், திரில்லர், நகைச்சுவை என அதிரடி கலவையான பதான் படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

படத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோனேவின் கலக்கல் கெமிஸ்ட்ரி, ஜான் ஆபிரஹாமின் அதிரடி நடிப்பு, சல்மான் கானின் 10 நிமிட சிறப்பு தோற்றம் என ரசிகர்களுக்கு திரை விருந்து அளித்துள்ளது. படத்திற்கு விஷால்-சேகர் இசையூட்டி உள்ளனர்.

இந்தியாவில் பெருநகரங்களான டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதில் புதிய சாதனையாக, படத்தின் வெற்றியால், கூடுதலாக 300 தியேட்டர்களை பெற்றது பதான். இதனால், உலக அளவில் மொத்தம் 8,500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளிவந்து உள்ளது என வர்த்தக நிபுணரான தரன் ஆதார்ஷ் கூறினார். தவிர, தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு படம் வெளியானது.

ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. பாடல்களுடன் ஒட்டுமொத்த கதைக்களமும் நன்றாக இருக்கின்றன. சில திருப்பங்களும் ஈர்க்கும் வகையில் உள்ளன என விமர்சனங்கள் வெளிவந்தன.

படம் திரையிடப்பட்ட முதல் நாளில் ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பதான் படம் வசூல் சாதனையை படைத்தது.

இந்தி திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தொடக்க நாளில் வசூல் வேட்டையை நடத்திய பதான் படம், டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இடங்களில் மொத்தம் ரூ.2 கோடி ஈட்டியுள்ளது என தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விடுமுறை அல்லாத நாளில் வெளிவந்து முதல் நாளிலேயே அதிக வசூல் ஈட்டியது, இந்தியாவில் அதிக திரையரங்குகளில் வெளியீடு, ஷாருக் கான், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரஹாமின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையை பதான் படைத்து உள்ளது. இதுபோன்று பதான் படம் 21 சாதனைகளை படைத்து உள்ளது.

படத்தின் கதைகளம் பயங்கரவாத தாக்குதலை உளவு அதிகாரி முறியடிக்கும் வகையில் உள்ளது. இதன்படி, இந்தியா மீது அதிரடியான தாக்குதல் நடத்த ஜிம் என்பவர் முனைகிறார். இந்த வேடத்தில் ஜான் ஆபிரகாம் வருகிறார். அவரது தலைமையிலான பயங்கரவாத குழுவை, உளவு அமைப்பு அதிகாரியான பதான் (ஷாருக் கான்) எப்படி வீழ்த்துகிறார் என்று, நகைச்சுவை, சஸ்பென்ஸ், அதிரடி காட்சிகள், திரில்லிங் என பல பரிமாணங்களுடன் படம் நகர்த்தி செல்கிறது. மற்றொரு உளவு அதிகாரியாக டைகர் வேடத்தில் சல்மான் கான் நடித்து உள்ளார்.

இந்நிலையில், பதான் படம் இந்தியாவில் முதல் 3 நாளில் ரூ.150 கோடியும், உலகம் முழுவதும் ரூ.300 கோடியும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 4-வது நாளில் உலக அளவில் ரூ.400 கோடி ஈட்டியது.

இதேபோன்று வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கூட, ஷாருக் கானின் பதான் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. படம் வெளிவந்து 4 வாரம் ஆகியுள்ள நிலையில், ரூ.1,000 கோடியை நோக்கி வசூல் வேட்டை நடந்து வருகிறது.

கடந்த வார இறுதியான சனி கிழமையில் வசூலை அதிகரிப்பதற்கு புதிய யுக்தி கையாளப்பட்டது. இதன்படி, டிக்கெட் விலை கடந்த வெள்ளி கிழமை அதிரடியாக குறைக்கப்பட்டது. அது வார இறுதியில் எதிரொலித்து, ரசிகர்கள் திரண்டனர்.

இதனால், 4 வாரங்கள் எட்டியபோதும் வார இறுதி வசூல் சாதனை படைத்தது. புதிய படங்கள் வெளிவந்தபோதும் பதான் பட வசூலில் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனால், இதுவரை பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்து இருந்த இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி 2 சாதனையை பதான் படம் முறியடித்து உள்ளது.

இதுவரை, தெலுங்கில் உருவாகி, இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி 2 படம், ரூ.510.99 கோடி வசூல் சாதனையுடன் முதல் இடத்தில் இருந்தது. பதான் படம் வசூல் ரூ.511.22 கோடியாக உள்ளது. இதனால், முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. தவிரவும், இந்தி படங்களில் இதுவரை வசூலில் முன்னணியில் உள்ள படம் என்ற பெருமையையும் பதான் பெற்று உள்ளது. படம் வெளிவந்து 25 நாளில் அதன் வசூல் உலக அளவில் ரூ.988 கோடியாக உள்ளது என யாஷ் ராஜ் பிலிம்ஸ் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com