

நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தனது ‘லாரன்ஸ் அறக்கட்டளை’ 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, கிராமப்புற ஏழை தாய்மார்களுக்கு இலவசமாக பட்டுப்புடவைகள் வழங்கும் ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ என்ற புதிய அறப்பணியை அறிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்கு இலவசமாக பட்டுப்புடவை வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில், ‘பட்டுப்புடவை திட்டம்’ எனும் புதிய முன்னெடுப்பை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளில், எங்கள் அறக்கட்டளை குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், உணவு வழங்குதல் எனப் பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்துள்ளது.தேவையுள்ள மக்களுக்குச் சேவை செய்யச் சென்றிருந்த ஒரு தருணத்தில், ஒரு பெண் என்னிடம் வந்து, தனக்கு ஒரு அழகான பட்டுப்புடவை வேண்டும் என்று கோரும் கடிதம் ஒன்றை வழங்கினார்.
அந்தக் கடிதத்தைப் படித்தபோது, கிராமப்புறங்களில் வாழும் இன்னும் எத்தனை பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பட்டுப்புடவையைக் கூட பார்த்திருக்கவோ அல்லது அணிந்திருக்கவோ வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருப்பார்கள் என்று நான் சிந்தித்தேன். எனவே, முதற்கட்டமாக 5000 பட்டுப்புடவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளேன்.அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், அனைத்துத் தாய்மார்களின் ஆசியைப் பெறவும் வேண்டும் என்ற எளிய நோக்கத்தோடு இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.
எனது பிறந்தநாளான அக்டோபர் 29 அன்று, நான் வளர்ந்த இடமான ராயபுரத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறேன். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆசிகளையும் ஆதரவையும் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.