

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலையும் உலுக்கியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த வெற்றியை ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுடன் ஒப்பிட்டு இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
கட்சியைத் தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே, எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனியாக களமிறங்கினார் விஜய். தேர்தலில் 108 இடங்களை வென்று, பல ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து வரலாறு படைத்துள்ளார்.
விஜய்யின் இந்த வெற்றியைச் சுட்டிக்காட்டி, பவன் கல்யாணை நெட்டிசன்கள் கடுமையாக டிரோல் செய்து வருகின்றனர். விஜய் முதல் தேர்தலிலேயே கோட்டையைப் பிடித்துவிட்டார், ஆனால் பவன் கல்யாணுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டது" என ஒப்பிட்டு மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பவன் கல்யாண் 2014-ல் ஜனசேனா கட்சியைத் (Jana Sena Party) தொடங்கினார். ஆனால் 2014 ஆந்திர தேர்தலில் அவர் நேரடியாக போட்டியிடவில்லை.அப்போது டிடிபி-பாஜக கூட்டணிக்கு ஆதரவு மட்டும் அளித்தார்.
2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அவர் முதல் முறையாக நேரடியாக களமிறங்கினார். பீமவரம் மற்றும் காஜுவாகா என்ற இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் தோல்வியடைந்தார். ஜனசேனா கட்சி வெறும் 1 இடம் மட்டுமே வென்றது.
தற்போது பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்-மதிரியாக உள்ளார். 2024 தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் வென்று, பின்னர் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.