பாராட்டிய பவன் கல்யாண் - நன்றி தெரிவித்த சூர்யா, கார்த்தி

நடிகர்கள் கார்த்தி, சூர்யா ஆகியோர் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
பாராட்டிய பவன் கல்யாண் - நன்றி தெரிவித்த சூர்யா, கார்த்தி
Published on

சென்னை,

மெய்யழகன்' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வு ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கார்த்தி, "இங்கு லட்டு குறித்து பேச வேண்டாம்" என்றும் "உணர்ச்சிமிக்க விஷயம் என்பதால் அதனை தவிர்த்துவிடலாம்" என்றும் கூறினார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தியின் இந்த கருத்துக்கு ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சினிமா நிகழ்வில் லட்டுவை வைத்து நகைச்சுவை செய்யக் கூடாது என்றும், சனாதன தர்மம் குறித்து பேசும்போது நூறு முறை யோசித்து விட்டு பேச வேண்டும் என்றும் பவன் கல்யாண் கூறியிருந்தார். பவன் கல்யாண் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரி இருந்தார்.

இது தொடர்பாக நடிகர் கார்த்தி தனது எக்ஸ் வலைதளத்தில், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், வெங்கடேச பெருமாளின் பக்தன் என்ற முறையில் நமது பண்பாட்டின் மீது பிடிப்புடன் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், தனது எக்ஸ் பக்கத்தில் அளித்த பதிலில், "உங்கள் துரிதமான பதிலையும், மரபுகளுக்கு நீங்கள் காட்டிய மரியாதையையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் பிரசாதமான லட்டுகள் போன்ற நமது புனிதங்களைப் பற்றிய விஷயங்கள் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையவை. அதுபோன்ற விஷயங்களை நாம் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். எந்த நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். மேலும் நிலைமை தற்செயலாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். பிரபலங்களாகிய நமது பொறுப்பு, ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பதாகும். சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இந்த விழுமியங்களை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்.

உங்களுக்கும், சூர்யா, ஜோதிகா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள் 'மெய்யழகன்' வெற்றி பெறவும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் தரட்டும்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

 'மெய்யழகன்' படத்திற்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரை டேக் செய்து பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்திருந்தநிலையில், நடிகர்கள் கார்த்தி, சூர்யா ஆகியோர் அவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com