

பேரன்பு படத்தை பி.எல்.தேனப்பன் தயாரித்து இருக்கிறார். படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சிறந்த படத்துக்கான விருதுகளை பெற்றுள்ளது.
தமிழ் பட உலகின் மிக சிறந்த டைரக்டர்களில் ஒருவரான ராம், பேரன்பு படத்தை பற்றி கூறியதாவது:-
இதுவரை நான் இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், பேரன்பு. கதாநாயகன் மம்முட்டி, 10 வருடங்களுக்குப்பின் நடித்துள்ள தமிழ் படம், இது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த டாக்சி டிரைவராக அவர் நடித்து இருக்கிறார். விஜி என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலி வருகிறார். தங்க மீன்கள் சாதனா, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, லிவிங்ஸ்டன், சண்முகராஜா, பூ ராம், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர்ராஜா இசையமைத்து இருக்கிறார். சர்வதேச திரைப்பட விழா உள்பட உலக அரங்கில் கொண்டாடப்பட்ட படம், இது. மம்முட்டியின் சிறந்த நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள இந்த படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.