கோவிலுக்கு இயந்திர யானையை பரிசாக வழங்கிய நடிகை பிரியாமணி

கேரளாவில் இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது யானை இதுவாகும்.
கோவிலுக்கு இயந்திர யானையை பரிசாக வழங்கிய நடிகை பிரியாமணி
Published on

சென்னை,

கோவில்கள் என்று சொன்னதும் நம் நினைவுக்கு ஒரு யானையும் நிச்சயம் வரும். சிறுவர்களாக இருக்கும்போது, பயந்து பயந்து அந்த யானையின் அருகில் சென்று வாழைப்பழத்தை கொடுத்து அதை யானை அலேக்காக தூக்கி வாயில் போட்டு சாப்பிடுவதை வாய் பிளந்து பார்த்த அனுபவம் எல்லாம் பையாஸ்கோப் போட்டதுபோல் ஓடும்.

ஆனால், எல்லா கோவில்களிலும் யானைகள் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதில்லை. சில இடங்களில் அது மனிதர்களால் கொடுமைகளுக்கு உண்டாக்கப்படுகின்றன. ஏற்கனவே காட்டில் உள்ள யானைகள் எல்லாம் மின்வேலிகள், அதிவேக ரெயில்களில் மூலம் அடிப்பட்டு உயிரிழக்கின்றன. அதன் வாழிடங்கள் எல்லாம் சுருங்கி வருகின்றன.

இந்நிலையில் கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு  மாற்றாக ஒரு புதிய முன்னெடுப்பை கேரளாவில் உள்ள கோவில்களில் இயந்திர யானையை கொண்டு நடைமுறைப்படுத்தும் பணியை பீட்டா அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், நடிகை பிரியாமணியும், பீட்டா அமைப்பும் இணைந்து, கொச்சியில் உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு,  ஒரு பெரிய இயந்திர யானையை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

இந்த யானைக்கு மகாதேவன் என்று பெயரிட்டுள்ளனர். கேரளாவில் இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது யானை இதுவாகும்.

இது குறித்து நடிகை பிரியாமணி கூறுகையில்,

தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் நமது வளமான கலாசார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும். இயந்திர யானையை பீட்டா அமைப்புடன் இணைந்து நன்கொடையாக வழங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

திருக்கயில் மகாதேவர் கோவில் உரிமையாளர் வல்லபன் நம்பூதிரி கூறுகையில்,

இயந்திர யானை மகாதேவனைப் பயன்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து விலங்குகளும் மனிதர்களைப் போலவே சுதந்திரமாகவும் குடும்பங்களுடன் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com