பேட்ட - விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ரஜினிகாந்தின் பேட்ட அஜித்தின் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பேட்ட - விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Published on

சென்னை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால், ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகள் முன் திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சேலத்தில் பேட்ட திரைப்படம் அதிகாலையில் வெளியான நிலையில், வானவேடிக்கைகள் முழங்க ரஜினியின் பேனரை ரசிகர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேளதாளங்களுடன் பேனருக்கு சூடம் காட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தனர். ரஜினியின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் விஸ்வாசம் திரைப்பட பேனருக்கு மாலை போடும்போது பேனர் சரிந்து விழுந்து 5 பேர் படுகாயமடைந்தனர். சீனிவாசா திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த 15 அடி உயர அஜித் பேனரில் ரசிகர்கள் ஏறியபோது பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. இதில் காயமடைந்த ரசிகர்கள் 5 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் ரஜினியின் பேட்ட படம் ரிலீசான தியேட்டரில் ரஜினி ரசிகர் ஒருவர் தனது திருமணத்தை நடத்தி உள்ளார். இதே போன்று தஞ்சையிலும் காதல் ஜோடி ஒன்றிற்கு ரஜினி ரசிகர்கள் தியேட்டரில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஜப்பான் ரஜினி ரசிகர்கள் 'பேட்ட' படத்தினை காண சென்னை வந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தை வரவேற்று வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மகளிரணி நிர்வாகிகள் பேட்ட பொங்கலை வைத்து திரைப்படம் காண வந்த ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்.

புதுச்சேரி: திரையரங்குகளில் பேட்ட திரைப்படம் வெளியானதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆடிப்பாடி கொண்டாட்டம்.

'பேட்ட' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளதை தொடர்ந்து நாகர்கோவிலில் 69 பானைகளில் பொங்கலிட்டு அதிர்வேட்டுகள் முழங்க ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com