அரசியலில் ஈடுபட திட்டமா? பட விழாவில் சூர்யா பேச்சு

ஐதராபாத்தில் பட விழாவில் கலந்து கொண்ட சூர்யா, ஆர்யா, சாயிஷா, சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.
அரசியலில் ஈடுபட திட்டமா? பட விழாவில் சூர்யா பேச்சு
Published on

தெலுங்கில் இந்த படத்தை பந்தோபஸ்து என்ற பெயரில் வெளியிடுகின்றனர். இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது சூர்யா பேசியதாவது:-

நான் நடித்த படங்களுக்கு தெலுங்கு, கன்னடம், மலையாள ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை மனதில் வைத்து நடிக்கிறேன். கதாநாயகனாக உழைப்பை கொடுப்பது மட்டுமே எனது வேலை. வெற்றி தோல்வி எங்கள் கையில் இல்லை.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 3-வது தடவையாக காப்பான் படத்தில் நடித்துள்ளேன். விவசாயம், அரசியலை பின்னணியாக வைத்து தயாராகி உள்ளது. பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜியை மையப்படுத்திய படம். நான் கமாண்டோ கதாபாத்திரத்தில் வருகிறேன். நமது கமாண்டோ படை வீரர்களின் உழைப்பை படத்தில் பார்க்கலாம்.

டில்லியில் 2 ஆயிரம் ஏக்கரில் உள்ள என்.எஸ்.ஜி. தலைமை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி வாங்கி 3 நாட்கள் அங்கு தங்கி கதாபாத்திரத்துக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன்.

குழந்தைகள், பெண்களை மையமாக வைத்து தயாராகும் படங்கள் குறைவாக உள்ளன. எனவேதான் குழந்தைகள் படங்களை தயாரிக்கிறேன். நானும் ஜோதிகாவும் விரைவில் புதிய படத்தில் இணைந்து நடிப்போம். 14 வருடங்களாக அகரம் கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். கல்வி பற்றிய தெளிவு இருப்பதால் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்தேன்.

அரசியலுக்கு வர திட்டம் உள்ளதா என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.

இவ்வாறு சூர்யா பேசினார். காப்பான் படத்தில் நடித்துள்ள ஆர்யா, சாயிஷா மற்றும் இயக்குனர் கே.வி ஆனந்த் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com