

மும்பை,
திரையுலகில் 50 ஆண்டுகளாக பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்றும் வீடியோவில் அவர் பேசி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தியும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் விழிப்புடன் இருக்கிறார் என்றும் பேசுவதை புரிந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மறுத்தார். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டார் என்றும் கூறினார். இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் திடீரென்று மோசம் அடைந்துள்ளது என மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதால் ரசிகர்களும், திரையுலகினரும் கவலை அடைந்துள்ளனர். அவர் குணமடைய பிரார்த்தித்து வருகிறார்கள்.
இதுபற்றி பாலிவுட் நடிகர் சல்மான்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூரண உடல்நலத்துடன் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன். எனக்காக பாடிய ஒவ்வொரு பாடலுக்காகவும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.