

இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் கடந்த 10ம் தேதி காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் இருந்தபடியே டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா கடந்த 10ம் தேதி அதிகாலையில் காலமானார். பாரதிராஜா மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளையராஜா, கமல், ரஜினி உட்பட ஏராளாமானோர் அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜா மறைவையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரம் மிகுந்த இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. ஓம் சாந்தி’ எனத் தெரிவித்திருந்தார்.
பினனர் பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச்சடங்குக்காக பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுக்கு பக்கத்தில் உள்ள காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த 11ம் தேதி மாலை அரசு மரியாதையுடன் பாரதிராஜா இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா மனைவி சந்திரலீலாவுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் “இந்த இழப்பை தாங்கிக்கொள்ளவும் குடும்பத்தினர் மன வலிமை பெறவும் வேண்டுகிறேன். கிராம வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த பாரதிராஜாவின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். இயக்குநர் பாரதிராஜா மறைவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஈடு செய்ய முடியாத இழப்பு ” என கூறியுள்ளார்.