குழந்தைகள் குறித்து மோசமாக பேசிய நபரை கடுமையாக விமர்சித்த ‘கவிஞர் சினேகனின்' மனைவி

குழந்தைகள் குறித்து மோசமாக பேசிய நபரை கடுமையாக விமர்சித்த ‘கவிஞர் சினேகனின்' மனைவி
Published on

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள அவர், 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் சீசன் 1' நிகழ்ச்சியில் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் கவிதை மற்றும் காதல் என பெயர் சூட்டியுள்ளார்.

இந்நிலையில் சினேகன் மனைவி கன்னிகா சினேகன், தன்னுடைய குழந்தைகள் குறித்து தவறான கருத்துகளை ஒருவர் பகிர்ந்த நிலையில், அவருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், "என்னுடைய இன்ஸ்டாகிராம் மெசேஜில் 'விக்னராஜ்SJ' என்பவர், என்னுடைய ஒரு வயது குழந்தைகளைப் பற்றிய தவறான கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவர் மீது நான் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன். அதுமட்டுமல்லாமல், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் 'child abuse' என ரிப்போர்ட் செய்தேன். தற்போது அந்த ஐடி பிளாக் செய்யப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சிவில் வழக்குகளும், கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யலாம். ஐடி சட்டத்தின் கீழ், இத்தகைய குற்றங்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இனிமேல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து அவதூறாக பேசிவிட்டு எளிதாக தப்பிக்க முடியாது. அதே நேரத்தில், அரசியல் விமர்சனங்கள் செய்யலாம், அது சமுதாயத்திற்கு நல்லது. ஆனால், அது நாகரிகமாக இருக்க வேண்டும். அனைவரும் சமூகத்தின் மீது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்." என்று குழந்தைகளை மோசமாக பேசிய நபரை கன்னிகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com