

சென்னை,
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பதினேழே நாட்களில் இன்னோர் இடியா?. பாரதிராஜாவைப் புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்குத் தீ மூட்டுவதா?. என்ன கொடுமை இது!. பாக்யராஜ் ஈடு இணையற்ற கலைஞன். அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத் திரைக்கதையில் இட்டு அதைத் தான்மட்டுமே அவிழ்க்கத் தெரிந்தவர்.
அவர் உருவம் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார். அவர் குரல் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார். நகைச்சுவைக்கென்று அவர் தனித்தடம் தயாரிப்பதில்லை; கண்ணின் பாகமான இமைபோல திரைக்கதையில் நகைச்சுவையை இழைத்து விடுவார்.
80களில் தமிழ் சினிமாவை நோக்கிவந்த ஒவ்வொரு கிராமத்து இளைஞனுக்கும் நம்பிக்கை கொடுத்தவர்
பாக்யராஜ் . எம்.ஜி.ஆர் அவரைத் தன் வாரிசு என்றார். பாக்யராஜின் எதிர்பாராத மறைவு கலையுலகை அதிரவைக்கிறது. வாழ்ந்திருக்க வேண்டிய கலைஞன் அய்யா நீ!. பாதியில் பயணப்பட்டு விட்டாயே! உன் உயிர் அமைதி அடைக! ஆழ்ந்த இரங்கல் அனைவருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.