போலீஸ் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - நடிகை குஷ்பு பேட்டி

வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீஸ் நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொது மக்களுக்கு போலீசார் தரும் தொந்தரவுகளை முதல்-அமைச்சர் நேரடியாக பார்க்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு அவருக்கு கீழ் தான் வரும்.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இது தி.மு.க. அரசின் தோல்வியை காட்டுகிறது. இதற்கு முதல்-அமைச்சர்தான் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. வரதட்சணை வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் தவறுதான். பெண் குழந்தைகள் நன்றாக வாழவேண்டும் என்றால் வரதட்சணை கொடுக்க வேண்டாம். பெண்ணுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று கேட்டால் அவர்களுக்கு பெண்ணை கட்டி தராதீர்கள்.
போலீஸ் நிலைய மரணங்கள், வரதட்சணை கொடுமை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி உள்பட எல்லா இடத்திலும் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறது. சினிமாவில் நடிப்பதால் சூப்பர் ஹீரோ கிடையாது. அவர்களும் சராசரி மனிதர்கள்தான். அவர்களுக்கும் போதை பழக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. போதைக்கு அடிமையானவர்களை எப்படி மீட்பது? என்ற வழியை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






