அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அறிவிப்பு முதல்,கட்சி தொடக்கம் அறிவிப்பு வரை... முழு விவரம்

தமிழ்நாட்டு தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. நிச்சயமாக அது நடக்கும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம். இப்போ இல்லைனா, எப்பவும் இல்லை. மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அறிவிப்பு முதல்,கட்சி தொடக்கம் அறிவிப்பு வரை... முழு விவரம்
Published on

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி தனது ரசிகர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது நான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற வார்த்தையை கூறினார். அதன்பின்னர், தன்னுடைய ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

பின்னர் நிர்வாகிகளை சந்தித்தும் வந்தார். அவ்வப்போது சில விழாக்களில் கலந்துகொண்டு அரசியல் தொடர்பான கருத்துகளையும் பேசி வந்தார். இந்த நிலையில் கொரோனா காலமாக இருந்ததால் அரசியல் பயணத்தில் சற்று தயக்கம் காட்டி வந்த அவர், கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம் தன்னுடைய உடல்நிலை குறித்தும், அரசியல் நிலவரம், சட்டமன்ற தேர்தல் நிலவரம் குறித்தும் பேசினார்.

அதையடுத்து மாவட்ட செயலாளர்கள் சிலர், உங்களுடைய உடல்நலம் தான்எங்களுக்கு முக்கியம். நீங்கள் அரசியலுக்கு வரவேண்டாம், என்ற கருத்தையும், சிலர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.

மாவட்ட செயலாளர்களின் அனைத்து கருத்துகளையும் கவனமாகவும், பொறுமையாகவும் கேட்டறிந்த ரஜினிகாந்த், அவர்கள் மத்தியில் பேசுகையில், உங்களுடைய எல்லோரின் கருத்துகளையும் பரிசீலிப்பேன். நன்றாக யோசித்து முடிவை அறிவிக்கிறேன் என்றுதெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் 12.16 மணியளவில் ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டரில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில், ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31-ந்தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்றும், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!! என்று பதிவிட்டு இருந்தார்.

கட்சி தொடர்பாக வருகிற 31-ந்தேதி அறிவிப்பை வெளியிடுவதாக கூறி இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அன்றைய தினத்தில் ஜனவரியில் எந்த தேதியில் கட்சியை தொடங்குவார் என்ற அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியே நான் சொல்லியிருந்தேன். அப்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அந்த நேரத்தில் முடிவு செய்வேன். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன், என்று சொல்லியிருந்தேன்.

அதற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து, மக்கள் மத்தியில் எழுச்சி வரணும். அந்த எழுச்சியை உண்டாக்கிய பிறகுதான் நான் கட்சி ஆரம்பிப்பேன், என்று கூறினேன். தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக அதை என்னால் செய்யமுடியவில்லை.

எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. நிறைய பேருக்கு அது தெரியாது. அதாவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சூழலில்தான் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை செய்வார்கள். இல்லையென்றால் தவிர்த்து விடுவார்கள். கொரோனா தாக்கக்கூடாது என்றால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கவேண்டும். அதுதான் பெரிய பிரச்சினை.

மக்களை நீங்கள் நேரில் சந்தித்து பிரசாரம் மேற்கொள்வது என்பது மருத்துவ ரீதியாக உங்களுக்கு ஆபத்து, என்று டாக்டர்கள் எனக்கு அறிவுரை வழங்கினார்கள். தேர்தலையொட்டி, மக்கள் மத்தியில் நேரில் சென்று பிரசாரம் செய்யாமல் என்ன செய்யமுடியும்? என்று நான் சிந்தித்து கொண்டிருந்தேன். அதற்கு பிறகு நான் நினைத்தேன். சிங்கப்பூரில் நான் சிகிச்சை மேற்கொண்டபோது, தமிழக மக்கள் மேற்கொண்ட பிரார்த்தனைகள், வேண்டுதல்களாலேயே நான் உயிர் பிழைத்து வந்தேன். அப்படி பார்க்கும்போது இந்த மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. அதை நினைத்து சந்தோஷப்படுபவன் என்னை விட யாரும் இருக்கமுடியாது.

கொடுத்த வாக்கில் நான் என்றுமே தவறமாட்டேன். ஒரு அரசியல் மாற்றம் என்பது மிகவும் கட்டாயம். அது காலத்தின் தேவை. மிகவும் முக்கியம். அரசியல் மாற்றம் நடந்தே ஆகவேண்டும். இப்போ இல்லைனா அது எப்போதுமே கிடையாது. மாற்றம் வேண்டும், எல்லாவற்றையும் மாற்றவேண்டும். அதற்கு நான் சிறிய கருவி தான். மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

நான் அரசியலுக்கு வரேன். அந்த மாற்றம் நடக்கும். நான் வந்தபிறகு, நான் வெற்றி அடைந்தால் அது மக்களின் வெற்றியாக இருக்கும். தோல்வி அடைந்தால் அது மக்களின் தோல்வியாக இருக்கும். இந்த மாற்றத்துக்காக மக்கள் அனைவரும் எனக்கு துணையாக இருக்கவேண்டும் என என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணாத்த பட சூட்டிங் பணி இன்னும் 40 சதவீதம் இருக்கிறது. அதை முடித்து கொடுக்கவேண்டியது எனது கடமை. அதை முடிப்பதற்குள், கட்சி 31-ந்தேதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். கட்சி வேலை என்பது ராட்சத வேலை. அத்தனை வேலை இருக்கிறது. அதனை நான் செய்யவேண்டும். அந்த வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.

அந்த வேலையை இன்னும் துரிதப்படுத்த தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்துள்ளேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று எப்போது சொன்னேனோ, அந்த நிமிஷத்தில் இருந்து எனக்கு அவர் ஆதரவு கொடுத்து வருகிறார். அர்ஜூனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருக்கிறேன்.

நாம் கடினமாக வேலை செய்து நம்மால் என்ன செய்யமுடியுமோ, அதை செய்து இந்த பாதையில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் தலையெழுத்து என்று ஒன்று இருக்கும். அதேபோல ஒவ்வொரு நாட்டுக்கும் தலையெழுத்து இருக்கிறது. தமிழ்நாட்டு தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. நிச்சயமாக அது நடக்கும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம். இப்போ இல்லைனா, எப்பவும் இல்லை. மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நான் சந்திக்கும்போது, உள்ளுக்குள் எவ்வளவோ ஆதங்கம் இருந்தால் கூட நீங்க அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் நலன் தான், உங்கள் ஆரோக்கியம்தான் முக்கியம் என்று கூறியவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

* 2017 டிசம்பர் 31-ந்தேதி ரசிகர்களுடனான சந்திப்பின் நிறைவில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடுவோம். அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. சிஸ்டத்தையே மாற்றவேண்டும் என்று பேசினார்.

* 2018 ஜனவரி 1-ந்தேதி பதிவு செய்த ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யாத ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிற மக்களையும் ஒருங்கிணைக்க ரஜினி மன்றம் என்ற இணையதளம் தொடக்கம்.

* 2018 ஜனவரி 2-ந்தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்த எனக்கு ஆசை என்றார்.

* 2018 ஜனவரி 3-ந்தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு. அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. உற்சாகமாக உள்ளது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

* 2018 ஜனவரி 6-ந்தேதி ரஜினி மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றம்.

* 2018 ஜனவரி 7-ந்தேதி மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில், நடிகனாக எனது வாழ்க்கை முடிந்துவிடக்கூடாது. தமிழக மக்களை நன்றாக வாழவைப்பதே எனது ஆசை என்று பேசினார்.

* 2018 பிப்ரவரி 24-ந்தேதி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார்.

* 2018 மார்ச் 12-ந்தேதி சென்னையில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று உறுதியாக கூறினார்.

* 2018 ஏப்ரல் 8-ந்தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும் என்ற கருத்தை ரஜினிகாந்த் முன்வைத்தார்.

* 2018 மே 9-ந்தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், நதிகளை இணைப்பதே என் கனவு, தமிழகத்துக்கு விரைவில் நல்லநேரம் வரும் என்று பேசினார்.

* 2018 மே 30-ந்தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்தார்.

* 2018 நவம்பர் 14-ந்தேதி பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்று ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டியளித்தார்.

* 2019 பிப்ரவரி 17-ந்தேதி சட்டசபை தேர்தல்தான் எங்களது இலக்கு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

* 2019 நவம்பர் 22-ந்தேதி 2021-ம் ஆண்டு தேர்தலில் அற்புதம் நிகழும் என நிருபர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

* 2020 ஜனவரி 22-ந்தேதி பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் நிருபர்களிடம் தெரிவித்தார்.

* 2020 பிப்ரவரி 6-ந்தேதி குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.

* 2020 மார்ச் 13-ந்தேதி சென்னையில் நட்சத்திர ஓட்டலில் ரஜினிகாந்த் நிருபர்களிடம், கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை, முதல்-அமைச்சர் ஆகமாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.

* அதன் பின்னர் கொரோனா காலத்தில் எந்தவித அறிவிப்போ, பேட்டியோ இல்லை.

* 2020 நவம்பர் 30-ந்தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அரசியலுக்கு வருவாரா? கட்சி தொடங்குவாரா? என்பது பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்று கூறினார்.

* 2020 டிசம்பர் 3-ந்தேதி (நேற்று) ஜனவரியில் கட்சி தொடக்கம். 31-ந்தேதி அதுபற்றி அறிவிக்கிறேன் என டுவிட்டரில் கூறியுள்ளார்.

2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினிகாந்த், 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வருகிற 31-ந்தேதி கட்சி தொடக்கம் எப்போது என்பது பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com